ஆச்சரியம்தான். ‘எவ்வளவு தொகைன்னு தெரியாம கொடுத்துட்டாரோ?’ என்றுதான் கேட்பார்கள், விஷயத்தைச் சொன்னால்! ஓட்டலின் விருந்தோம்பலில் சிலிர்த்து 16 லட்சம் ரூபாயை யாராவது டிப்ஸ் கொடுப்பார்களா? கொடுத்திருக்கிறார் ரொனால்டோ!

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கிளப்புக்காக விளையாடிய இவர், சமீபத்தில் அதிலிருந்து விலகி இத்தாலியின் ஜூவான்டஸ் கிளப்பில் விளையாட ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்காக நான்கு வருடத்துக்கு 800 கோடி ரூபாய் அவருக்கு வழங்கப்படுகிறது. புதிய அணிக்காக 30 ஆம் தேதி பயிற்சியை தொடங்குகிறார்.

இந்நிலையில் தனது காதலி மற்றும் குடும்பத்துடன் தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸூக்கு சுற்றுலா சென்றார். அங்கு கோஸ்டா நவரினோ என்ற ஆடம்பர நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். ஓட்டல் நிர்வாகத்தின் விருந்தோம்பலில் மெய் சிலிர்த்துவிட்டார் ரொனால்டோ. கொஞ்சம் பிரமாண்டமாகவே கவனித்துவிட்டார்கள் போலிருக்கிறது அவரை!

செக் அவுட் செய்யும் போது, டிப்ஸாக மட்டும் 17 ஆயிரத்து 850 யூரோவை கொடுத்துவிட்டுச் சென்றார். ஓட்டல் நிர்வாகத்தால் கூட நம்ப முடியவில்லை! ’தெரிஞ்சுதான் கொடுத்திருக்கிறாரா?’ என்று சந்தேகம். தெரிந்தே கொடுத்திருக்கிறேன் என்றபடி புன்னகையுடன் விடைபெற்றிருக்கிறார், இந்த கால்பந்து கிங். அவர் கொடுத்த யூரோவின் இந்திய மதிப்பு, ஜஸ்ட் 16 லட்சம் ரூபாய்தான்! ‘வள்ளல்யா’ என்று புகழ்கிறார்கள் ஓட்டல் ஊழியர்கள்!

சமீபத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்தோனேஷியாவின் பாலி தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவருக்கு சாப்பாட்டு பில், 7 லட்சம் ரூபாய் வந்தது. அதை ட்விட்டரில் வெளியிட்டிருந்த அவர், ஆத்தாடி என்று ஆச்சரியப்பட்டிருந்தார். ஆனால் அதன் இந்திய ரூபாய் மதிப்பு, 3,334 தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here