இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி 77 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்க அணி, 404 ரன்கள் பின்தங்கியிருந்தது.

ஒரு நல்ல பேட்ஸ்மேனுக்கு நிகராக விளையாடிய மஹாராஜா 96 பந்துகளில் அரை சதமெடுத்தார். ஃபாலோ ஆன் திட்டத்தில் கோலி இருந்ததால் தொடர்ந்து அஸ்வினையும் ஜடேஜாவையும் பந்துவீசச் செய்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுத்தார்.

பிறகு மஹாராஜா – பிலாண்டர் கூட்டணி 9-வது விக்கெட்டுக்கு 100 ரன்களை எடுத்து அசத்தியது. இந்த டெஸ்டில் 100-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய மஹாராஜா, சதமும் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 72 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்

பிறகு, ரபடா 2 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவர்களில் 275 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. பிலாண்டர் 44 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் ஷமி 2 விக்கெட்டுகளும் ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.

முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 326 ரன்கள் பின்தங்கியதால் இந்திய அணி ஃபாலோ ஆனை அமல்படுத்துமா என்பது நாளை தான் தெரிய வரும். இன்னும் இரு நாள்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் கேப்டன் கோலி என்ன முடிவெடுப்பார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here