தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் நாளன்று இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்துள்ளது.

2-வது டெஸ்ட் புணேவில் இன்று முதல் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கடந்த டெஸ்டில் இரு சதங்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா இன்று 14 ரன்களில் ரபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு வழக்கம்போல அவரவர் பாணியில் மயங்க் அகர்வாலும் புஜாராவும் விளையாடினார்கள். 112 பந்துகளில் மயங்க் அகர்வாலும் 107 பந்துகளில் புஜாராவும் அரை சதங்களை எட்டினார்கள். ஆனால், அரை சதமெடுத்த அடுத்த ஓவரிலேயே 58 ரன்களில் ரபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் புஜாரா.

முந்தைய டெஸ்டில் நிலைத்து நின்று விளையாடி இரட்டைச் சதமெடுத்த மயங்க் அகர்வால், இந்தமுறை 108 ரன்களில் ரபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சு நன்றாக இருந்ததால் கோலியும் ரஹானேவும் கவனமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள்.

இந்த டெஸ்டில் கோலி சதமெடுப்பார் என்கிற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். வெளிச்சம் குறைவாக இருந்ததால் 85.1 ஓவர்களில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 85.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 63, ரஹானே 18 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here