மீண்டு வந்து மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன்; கேதர் ஜாதவ் நம்பிக்கை

காயத்தில் இருந்து மிக வேகமாக குணமடைந்து வந்து இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க காத்துள்ளதாக கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான கேதர் ஜாதவ் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எடுக்கப்பட்டார். கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்ட கேதர் ஜாதவிற்கு முதல் போட்டியிலேயே காயம் ஏற்பட்டதால், முதல் போட்டிக்கு பிறகு ஒட்டுமொத்த தொடரில் இருந்தும் விலகினார்.

இதன் காரணமாக ஆஃப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணியுடனான நடப்பு தொடர் ஆகியவற்றில் கேதர் ஜாதவ் இடம்பெறவில்லை.

இந்நிலையில் தற்போது காயத்தில் இருந்து ஓரளவிற்கு குணமடைந்துள்ள கேதர் ஜாதவ் அடுத்த இரண்டு அல்லது மூன்று வார காலத்திற்குள் வலை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக அவரே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கேதர் ஜாதவ் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, “நான் மிக வேகமாக குணமடைந்து வருகிறேன். நான் எதிர்பார்த்தைவிட வேகமாக குணமடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரத்திற்குள் காயத்தில் இருந்து முழுமையாக விடுபட்டு பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளேன். பயிற்சியின் மூலம் விரைவில் தயாராகி அணியில் மீண்டும் இடம்பிடிப்பேன்.

மூன்றாவது முறையாக அதே தசை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் வலி ஏற்படுவதால் அதற்கான காரணத்தை கண்டுபிடித்து அதற்கான தீர்வையும் கண்டறிய வேண்டும் என்று கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். இதனை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரிலேயே அறுவை சிகிச்சையும் செய்து கொண்டேன். ஓய்வில் இருந்து இந்த மூன்று மாத காலம் சற்று கடுமையாக இருந்தாலும் எனக்கு நிறைய விசயங்களை கற்று கொடுத்துள்ளது, உடற்தகுதி மற்றும் வலிமையின் அவசியத்தை தற்போது முழுமையாக உணர்ந்துள்ளேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here