இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யார் ரிஷப் பன்ட் ?

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற யூ19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்தான் ரிஷப் பந்தை இந்த உலகத்துக்கு அடையாளம் காட்டியது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க பேட்ஸ்மேன் இவர்தான். ஆறு போட்டிகளில் ஒரு சதம், 2 அரைசதம் (ஸ்டிரைக் ரேட் – 104) என அசத்தலான ஆட்டத்தையே தொடர் முழுவதும் வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக, இரண்டு போட்டிகளில் ரவுண்டு கட்டி அடித்தார் ரிஷப் பந்த்.நேபாள அணிக்கு எதிரான போட்டியில், ஆரம்பம் முதலே அந்த அணியின் பந்துவீச்சை சிதறடித்தார்.

அந்தப் போட்டிக்கு முன்புவரை, 19 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச போட்டிகளில்,வெஸ்ட் இன்டீசைச் சேர்ந்த ட்ராவான் கிரிஃப்பித் எனும் வீரர் 19 பந்துகளில் அரைசதம் அடித்திருந்ததே, அதிவேகமான அரைசதமாக இருந்தது. ஆனால், அந்த போட்டியில், ரிஷப் 18 பந்துகளில் அரைசதம் விளாசி, அந்தச் சாதனையை உடைத்தார். பின், நமீபியா அணிக்கெதிரான போட்டியில், 111 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை பெற்றார். அப்போதே இந்தியாவின் அடுத்த தோனி என பாராட்டப்பட்டார் ரிஷப் பந்த்.

அதேபோல், 2016 ரஞ்சி சீசனில், டெல்லி அணிக்காக விளையாடிய ரிஷப், அதிரடியான 300, 48 பந்துகளில் அதிரடியான செஞ்சுரி, அசத்தலான இரட்டைச் சதம் என கிராஃபை உயர்த்தினார். இதனால், கடந்த 2016-ஆம் ஆண்டு, இவரது அடிப்படை விலையான 10 லட்சத்தைவிட, 19 மடங்கு அதிக விலைக்கு, டெல்லி டேர்டெவில்ஸ் அணி இவரை வாங்கியது. அந்தாண்டு ஐபிஎல் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ருத்ரதாண்டவமே ஆடினார் ரிஷப் பந்த்.

அந்த இன்னிங்ஸை பார்த்த சச்சின் டெண்டுல்கர் “நான் பார்த்த 10 சீசன் ஐபிஎல்களில் சிறந்த இன்னிங்ஸ் ரிஷபுடையது” என பாராட்டினார். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக 600 ரன்களுக்கு மேல் குவித்தார். கங்குலியும் தனது ட்விட்டர் பக்கத்தில் “அணியில் விரைவில் இடம் பெறுவீர்கள் காத்திருங்கள்” என ரிஷப் பந்த் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். ராகுல் டிராவிட் கைகாட்டிய வீரராச்சே நிச்சயம் சொதப்பமாட்டார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here